27 September 2011

வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு!

அண்மையின் மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது. அதாவது, தினசரி ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று சொல்லி இருக்கிறது.

இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.



இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும், கிராமங்களில் ரூ.26-க்கும் அதிகமாக செலவிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்காக வழங்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாது.

அதே நேரத்தில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு சரிதானா என்றால் ஆரம்ப பள்ளிக் கூடத்தில் படிக்கும் பிள்ளைக் கூட இல்லை என்று சொல்லிவிடும். காரணம், நகரங்களில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கான ஒரு நாள் செலவு 32 ரூபாயை விட அதிகமாக இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு நாளில் மூன்று வேளை பால் மற்றும் பிஸ்கட், மூன்று வேளை சாப்பாடு, பள்ளிக் கூடத்துக்கு சென்று வரும் போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கில் எடுத்தால் சர்வ சாதாரணமாக 50 ரூபாயை தாண்டிவிடும்.

அடுத்து, வளர்ந்த ஒரு இந்தியரை எடுத்துக் கொண்டால் அவர் நகரங்களில் மதிய வேளையில் ஓரளவுக்கு நல்ல திருப்திகரமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றாலே சுமார் 35 ரூபாய் தேவைப்படும். இந்த ஒரு வேளை உணவுக்கே திட்டக் கமிஷன் குறிப்பிடும் தொகை செலவாகி விட்டால் மற்ற வேளைகளில் பட்டினியா கிடப்பது?

இந்த அறிக்கையில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நகர்புறங்களில் வசிப்பவர்களின் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவு மாதம் ஒன்றுக்கு 49.10 ரூபாயை தாண்டினால் அவர்கள் பணக்காரர்களாம். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் முக்கியமான பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஒரு ச.அடியின் வாடகையை 50 ரூபாய்க்கு அதிகமாக இருக்கிறது. போக்குவரத்து செலவை பற்றி கேட்கவே வேண்டாம். கூப்பீடு தூரத்துக்கு போக வேண்டும் என்றாலே ஆட்டோவுக்கு குறைந்தது 20 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அடுத்த மிகப் பெரிய கேலிக் கூத்து..! 

மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக மாதம் 39.70 ரூபாய் செலவு செய்யும் நகர் புற இந்தியர்கள் பணக்காரர்களாம். நகரங்களில் மணிக் கணக்கில் காத்திருந்து டாக்டர்களின் ஆலோசனை பெற ஒரு முறைக்கு குறைந்தது 100 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதில், அவர் மருந்து - மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால் குறைந்தது, ஐநூறு ரூபாய் காலி.

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து காட்டவே செயற்கையான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு மாற்றமாக திட்டக் குழு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் தனிநபர் வருமானம் போன்றவற்றால், உலகின் பணக்கார நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்கா தற்போது அந்நிலையை படிப்படியாக இழந்து வருகிறது.

இன்றைய நிலையில் உலகில் மோசமாக நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடு அமெரிக்கா.
அங்கு அமெரிக்காவில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 22,314 டாலருக்கு (சுமார் ரூ.10.50 லட்சம்) குறைவாக இருந்தால் அந்த குடும்பம் வறுமையில் வாடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல், தனிநபராக இருந்தால் அவரது ஆண்டு வருமானம் 11,139 டாலருக்கு (சுமார் ரூ.5.25 லட்சம்) குறைவானால் அவரும் வறுமையில் வாழ்பவராக கருதப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம், கிட்டத்தட்ட 272 மடங்கு குறைவு. இந்தியாவை விட அமெரிக்காவில் செலவுகள் நிச்சயமாக 272 மடங்கு அதிகம் என்று சொல்ல முடியாது.

அமெரிக்காவின் வசிக்கும் நம் தமிழ் நண்பர்களிடம் பேசிய போது ஒரு விஷயம் பிடிபட்டது. நம் ஊரில் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 10,000 ரூபாய் இருந்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அமெரிக்காவில் மாத வருமானம் சுமார் 1,150 டாலர் இருந்தால் ஒரு குடும்பம் சமாளிக்க முடியும். அந்த வகையில் அந்த நாட்டின் வறுமைக் கோட்டு கணக்கெடுப்பு சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லாம். அதையொட்டி பார்க்கையில், நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்பதற்கான வருமான அளவை மாத வருமானம் 10,000 ரூபாய் என்று நிர்ணயிப்பது நியாயமாக இருக்கும்.

அரசு செய்யுமா?

 கட்டுரையாளர்: சி.சரவணன்

 நன்றி: vikatan.com